Share

Jun 22, 2017

ஏ.வி.எம். ஸ்டுடியோவில் ஒரு நாள்


ஏ.வி.எம்.ஸ்டுடியோ எடிட்டிங் பிரிவில் எப்போதும் கலகலப்பாக இருக்கும்.
எடிட்டர்கள் பால்துரை சிங்கம், லெனின், விஜயன், கே.ஆர் ராமலிங்கம் இருந்த முன் பகுதி.

ஆர்.ஆர் தியேட்டரில் கே.ஆர்.விஜயா நடித்த ’மங்கலநாயகி’ படத்தின் மிக்ஸிங் வேலை. கம்பர் ஜெயராமன் இந்த வேலைகளை செய்து கொண்டிருந்தார்.

அந்தப் படத்தின் இயக்குனர் ( கிருஷ்ணன்) பஞ்சு அங்கிருந்து கிளம்பி எடிட்டிங் பகுதிக்கு வந்து கொண்டிருக்கும் போதே டைரக்டர் புட்டண்ணா கனகல் அவருடன் சேர்ந்து கொண்டார்.
புட்டண்ணா அப்போது கொஞ்ச காலம் முன் ஒரு சினிமாஸ்கோப் படம் கன்னடத்தில் பிரமாண்டமாக எடுத்திருந்தார்.

பஞ்சுவின் காலம் அப்போது தேய்ந்து மங்கிக் கொண்டிருந்தது. மகேந்திரன், பாரதிராஜா, பாலுமகேந்திரா மற்றும் பெரிய பட்ஜெட் படங்கள் ஐ.வி.சசி, எஸ்.பி.முத்துராமன், ஜி.என்.ரங்கராஜன் – இப்படி திரைத்துறை சுழித்துப்போய் கொண்டிருந்த காலம்.

எடிட்டிங் பில்டிங் வெராண்டாவில் பஞ்சு கன்னட இயக்குனர் புட்டண்ணா கனகலுடன் நுழைந்து நடக்கும் போதே எடிட்டிங் அறையில் இருந்த எடிட்டர்கள், எடிட்டிங் அஸிஸ்டண்ட்ஸ், அஸிஸ்டண்ட் டைரக்டர்கள் என்று எல்லா டெக்னிஸியன்களும் வெராண்டாவிற்கு வந்து மரியாதையாக நின்று கொண்டார்கள்.

பஞ்சு சார் புத்தம் புது முழுக்கை சட்டை பட்டன் ஒன்று கூட போடாமல் உள்ளே பனியன் தெரியத் தான் வந்தார். எப்போதும் திறந்த சட்டையுடன் தான் இருப்பார்.

முன் பகுதி பெஞ்சில் பஞ்சுவும், புட்டண்ணாவும் உட்கார்ந்தார்கள். புட்டண்ணா நல்ல கான்வர்ஸேசனலிஸ்ட். சிரித்த முகமாக பேசிக்கொண்டிருந்தார். பஞ்சு சிரித்தமுகம் கிடையாது. கொஞ்சம் சீரியசாக தெரிவார். ஆனால் தான் அதிகம் சிரிக்காமல் மற்றவர்கள் ரசிக்கும் படியாக பேசுவார்.
………….

பஞ்சு கோபம் ரொம்ப பிரபலம். மு.க.முத்து ’பிள்ளையோ பிள்ளை’ பட ஷூட்டிங் போது நடந்த பழைய விஷயம் ஒன்றை புரடொக்சன் அசிஸ்டெண்ட் எலி சொல்லியிருக்கிறான். ஃபீல்டில் ஒரு பெரிய கல் இருந்திருக்கிறது. எலி அது தேவையில்லையோ என்று அப்புறப்படுத்தியிருக்கிறான். பஞ்சு கத்தியிருக்கிறார். “ங்கோத்தா இங்க இருந்த கல் எங்கடா. நான் தானே இங்க போடச் சொன்னேன்.”
ஒரு ஆள் சொல்லியிருக்கிறார் ‘எலி தான் சார் தூக்கி வெளிய போட்டுட்டான்’
பஞ்சு ”எங்கடா அவன்? இங்க ஒன்னு நான் இருக்கணும். இல்ல அவன் இருக்கணும். ங்கோத்தா என்னடா சொல்றீங்க?”
………………..

இங்கே இப்போது எடிட்டிங் ஹாலில் பஞ்சு அங்கே நின்று கொண்டிருந்த ஒரு முப்பது வயது மதிக்கத்தக்க ஒருவனை பார்த்து “ இங்கே வாடா “ என்றார்.
”இவன் பாருங்க. எல்லாரையும் மிரட்டிக்கிட்டு இருக்கான்.”
’என்னடா எல்லார் கிட்டயும் சொல்ற. சொல்லு’
ஒரு டெக்னிஸியன். அஸிஸ்டெண்ட் டைரக்டரா, எடிட்டிங் அஸிஸ்டெண்டா தெரியவில்லை.
அவன் எந்த பதிலும் சொல்லவில்லை. பஞ்சு போலவே முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டே நின்றான்.

பஞ்சுவே சொன்னார். “ இவனும் சிவாஜியும் ஒரே பேட்ஜுன்னு சொல்றான்.’நானும் சிவாஜி கணேசனும் பராசக்தியில ஒன்னா ஃபீல்டுக்கு வந்தோம். நான் தான் இங்க ஒங்களுக்கெல்லாம் சீனியர்’னு எல்லாரையுமே மிரட்டுறான் பாத்துக்கங்க.”

”பராசக்தியில இவன் தான் சிவாஜிக்கு தங்கையா நடிச்ச ஸ்ரீரஞ்சனியோட கைக்குழந்தை.”

…………………………………………………..
http://rprajanayahem.blogspot.in/2017/03/blog-post_21.html

Jun 21, 2017

ஒரு சினிமா தயாரிப்பாளர்


தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் எவ்வளவு பெரியவர்களெல்லாம் இருந்திருக்கிறார்கள். நாகிரெட்டி, L.V.பிரசாத், A.V.மெய்யப்ப செட்டியார்,சாண்டோ சின்னப்பா தேவர், கே.பாலாஜி, பஞ்சு அருணாச்சலம்….


அக்கரைப் பச்சை என்று ஒரு படம். ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், லக்ஷ்மி, ஜெய சித்ரா, நாகேஷ் நடித்திருந்தார்கள்.
இந்தப் படத்தின் இயக்குனர் என்.வெங்கடேஷ். இவர் பின்னால் ஃபிலிமாலயாவில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஜி.கே.தர்மராஜ். இவர் சவடால் பேர்வழி. Uneducated crook என்ற வார்த்தையை வெங்கடேஷ் உபயோகித்து சீறியிருந்தார். தர்மராஜ் ஒரு பெரிய ஃப்ராடு என்பது அக்கரைப் பச்சை இயக்குனரின் ஸ்டேட்மென்ட். அக்ரிமெண்ட் போடும்போது கையெழுத்துப் போட தயக்கம் எல்லோருக்கும் இருந்ததாகவும் ஆனால் வெறும் ஆளான ஜி.கே. தர்மராஜ் துணிச்சலோடு கையெழுத்திட்டு தயாரிப்பாளர் ஆனது ஒரு விபத்து என்றும் பேட்டியில் இயக்குனர் கூறியிருந்தார். அந்தப் பேட்டியே ஒரு சின்ன உணவகத்தில் எடுக்கப்பட்டிருந்தது. படம் எடுக்கும்போதே பல தொந்திரவுகள் இவரால். ஃபைனான்ஸ் தொகை இன்ஸ்டால்மெண்ட்டில் கிடைத்த வேளைகளில் இவர் பணத்தை பெற்றதும் இவரை தேடும் நிலை கூட ஏற்பட்டதாகவும் வெங்கடேஷ் புலம்பியிருந்தார்.

ஆனால் பல வகையில் படம் ரிலீஸ் ஆன பின் தர்மராஜின் வாழ்க்கை தான் செழிப்பாக மாறியது.
The devil has better chance in this world!


ஜோதிடம் சொல்வதில் கொஞ்சம் சினிமாவில், அரசியல் உலகில் கூட பிரபலம் தர்மராஜுக்கு இருந்திருக்கிறது.
வடுகபட்டி ஜி.கே. தர்மராஜ். பெரிய குங்குமப் பொட்டு, மீசை.
ஒரு தயாரிப்பாளர் ஆக பரபரப்பாக சில வகையில் பிரபலமானார்.

சிவாஜி படம் ஒன்றை தயாரிக்கும் அளவுக்கு உயர்ந்தார்.
’இளைய தலைமுறை’யின் தயாரிப்பாளர் ஜி.கே.தர்மராஜ்.
’இளைய தலைமுறை படத்திற்கு தடை’ என்று தினத்தந்தியில் தலைப்புச் செய்தி.
தடை நீங்கி படம் ரிலீஸ் ஆனது
தர்மராஜ் இப்படியெல்லாம் சினிமாவை கலக்கினார்.


இதை விட பரபரப்பான செய்தியொன்று பின்னால் அகில இந்தியாவை திரும்பிப் பார்க்கும்படியாக செய்தது.
எம்.ஜி.ஆர் தன் வாழ்வில் எத்தனை தயாரிப்பாளர்களைப் பார்த்திருப்பார்.
முதலமைச்சர் ஆன பின் அவர் நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டார்.
ஆனால் எதனாலோ மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்தது!

சாதாரணமாகவே நடிகன் யாராயிருந்தாலும் கைக்கட்டு வாய்க்கட்டு கால்கட்டோடு பாடையில் போகும் போது தான் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் போகும்.

அதனால் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்ததை வினோதம் என்று சொல்ல இயலாது.
முதலமைச்சர் ஆன பின் அவர் நினைத்திருந்தால்
தான் கதாநாயகனாய் நடிக்கும் படத்தை தயாரிக்க பெரிய தயாரிப்பாளர் ஒருவரை அழைத்திருக்க முடியும்.

Dharmaraj fell into the honey pot! Excessive fortune!
What was the cap of his fortune?

தர்மராஜ் என்ன வசியம் செய்தாரோ, எப்படி எம்.ஜி.ஆரை கன்வின்ஸ் செய்தாரோ, யார் மூலமாக எம்.ஜி.ஆரை தொடர்பு கொண்டு சம்மதிக்க வைத்தாரோ?
தலைப்பு கூட தர்மராஜின் இலக்கு குறித்த குறிப்பாக இருந்ததே ஒரு அபத்தம்.
“ உன்னை விட மாட்டேன்”

கவிஞர் வாலி தான் டைட்டில் உபயம். அவர் தான் அவசரமாக அவசரமாக படத்துக்கு கதை உண்டு பண்ணியவர்.

சினிமாவுலகத்தை விடமாட்டேன் என்று அர்த்தமா? முதலமைச்சரானாலும் எம்.ஜி.ஆரை நடிக்க வைக்காமல் விடமாட்டேன் என்று அர்த்தமா?!

ஜி.கே. தர்மராஜ் தயாரிக்கும், இளையராஜா இசையமைக்கும், முதலமைச்சர்
 கதாநாயகனாய் நடிக்கும்
“ உன்னை விட மாட்டேன்.”
பாடல் பதிவுடன் பூஜை.
தினத்தந்தி தலைப்பு செய்தி மீண்டும்!

ஒரு முதலமைச்சர் சினிமாவில் நடிக்கலாமா? கடும் சர்ச்சை. அகில இந்தியாவே இந்த விசித்திர செய்தியை கவனித்தது.
எம்.ஜி.ஆர் படத்தில் நடிக்கிற ஆசையை ஓரம் கட்டி விட்டு முதலமைச்சர் வேலையை மட்டும் அப்போது தொடர்ந்தார்.

……………………………