சஹானாவும் தேவாம்ருதவர்ஷினியும்

தியாகபிரும்மத்தின் சஹானா ராக கீர்த்தனை "கிரிபை" M.D.ராமநாதன் பாடியதை எத்தனை தடவை கேட்டாலும் திகட்டவே செய்யாது . அதோடு அப்போது ஏற்படும் ஆத்மீக அனுபவம் விசேசமானது.இந்த பாக்யம் போதுமே என ஒரு மனநிறைவு ஏற்படும் .

19 வது நூற்றாண்டில் மகா வைத்யநாத பாகவதர் இந்த சஹானா "கிரிபை" யை அனுபவித்து பாடுவாராம் . ஒவ்வொரு கச்சேரியிலும் விரும்பி பாடும் வழக்கத்தை கொண்டிருந்தார் . ரசிகர்களும் அவர் மறந்தாலும் ஞாபகப்படுத்தி கேட்டு மகிழ்வார்கள் .
ஒரு முறை பிச்சாண்டார் கோவில் சுப்பையர் இந்த சஹானா கீர்த்தனையை பாடும்போது மகா வைத்யநாதர் கேட்டிருக்கிறார் . நெகிழ்ந்து கண்ணீர் மல்க சுப்பையர் அவர்களை இவர் தழுவிக்கொண்டாராம் .
அதன் பிறகு எந்த கச்சேரியிலும் அந்த கீர்த்தனையை மகா வைத்யநாத பாகவதர் பாடியதே கிடையாது .
கிரிபை பாட சொல்லி பல சங்கீத ரசிகர்கள் விரும்பிகேட்கும்போதெல்லாம் மறுத்து விடுவாராம் . "அது பிச்சாண்டார் கோவில் சொத்து " என்பதே அவர் பதிலாயிருந்திருக்கிறது .

தேவாம்ருதவர்ஷினி ராகம் மழையை வருவிக்கும் என்பது ஐதீகம். இந்த ராகத்தை நாத சிந்தாமணி என்றும் பெரியவர்கள் சொல்வார்கள் . "எவரனி"தேவாம்ருத வர்ஷினி இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அப்போது பிரபலமாயிருந்த வாக்கேயக்காரருமான ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர்( எழுத்தாளர் சிவசங்கரியின் தாத்தா ) ஒரு ரிகார்டிங் கம்பெனி க்காக பாடி பதிவாகியிருந்த சூழ்நிலையில் அப்போது இளைஞனாயிருந்த கிட்டப்பா பாடி அதே "எவரனி" யின் மற்றொரு பதிவை கேட்ட முத்தையா பாகவதர் , கிட்டப்பாவின் பாட்டில் சொக்கி ப்போய் தன்னுடைய பதிவை உடனே நீக்கி கொள்ளும்படி ரிகார்டிங் நிறுவனத்திடம் அட்வான்சை திருப்பிகொடுத்து விட்டாராம் ." கிட்டப்பா பாடியது தான் "எவரனி" -மிகபெருந்தன்மையோடு ஹரிகேச நல்லூர் பூரித்துப்போனாராம் .

1 comments:

  1. இந்த மாதிரி சுவையான தகவல்கள் படிக்க நன்றாக உள்ளது.

    தொடரட்டும் பணி.

    அன்புடன் சூர்யா.

Post a Comment

Followers