ஒரு நாள் பிராந்தி கடையில் உட்கார்ந்து வியாபாரம் பார்த்து கொண்டிருக்கிறேன் . வருடம் 1985 . ஒரு கார் கடை முன் நின்றது . காரிலிருந்து இறங்கியவருடன் அவருடைய நண்பர்கள் சிலர் . கடைக்கு வந்து இவர் என்னிடம் 'கோல்கொண்டா Full இரண்டு பாட்டில் கொடுங்க சார் .' கடையில் வேலை பார்த்து கொண்டிருந்த இருவரையும் கொடுக்க சொன்னேன் . கடையில் உள்ள ஆள் அதை எடுக்கும் போதே , இவருடன் வந்தவர் ' அப்படியே அஞ்சு கல்யாணி பீர் ' என்றார் . குற்றாலம் போகிறார்கள் . அதை இன்னொரு ஆள் எடுத்துக்கொண்டிருந்த போது நான் இவரிடம் ' மதுரையிலேயே செட்டில் ஆகிட்டீங்க போலிருக்கே சார் ' என்றேன் .
லேசாக திடுக்கிட்டு அவர் ' என்னை எப்படி கண்டு பிடிச்சீங்க !'
'என்ன சார் முன்னாள் முதல்வர் மகனை கண்டு பிடிப்பது என்ன சிரமமான காரியமா ?'
மு.க .அழகிரி ! அப்போதெல்லாம் அழகிரி - ‘The less-discussed son of Karunanithi’ . மு.க. முத்து வும் , மு .க . ஸ்டாலின் ஆகிய பிள்ளைகள் தான் பாபுலர் . 1985 எனும்போது அதற்கு பத்து பன்னிரண்டு வருடம் முன் முத்து ,ஸ்டாலின் போல கனிமொழி கூட அப்போது சிறுமியாயிருக்கும் போதே பிரபலம் !
( சட்டசபையில் கேள்வி - கனிமொழி யார் ? ' கருணாநிதி பதில் ' என் மனைவி தர்மா சம்வர்த்தினி யின் மகள்' . -'தர்மாசம்வர்த்தினி யார் ? ' 'என் மகள் கனிமொழியின் தாயார் ')
இப்போது தான் கனிமொழியின் தாயார் ராஜாத்தியம்மாள் என அழைக்க படுகிறார் .
கருணாநிதியின் மகன் என நான் சொன்னது தான் தாமதம் .கடையில் வேலை பார்த்த இருவரும் திமுக காரர்கள் . வாயை பிளந்தது மூடவே இல்லை . யார் யார் . இவர் தான் மு .க . அழகிரி .
அழகிரி என்னைப்பார்த்து ' உங்கள் முகம் ரொம்ப Familiar ஆ இருக்கு சார் ' என்றார் சிந்தனையுடன் .
நான் உடனே ' I am a nameless face .. or a faceless name.. ' சிரித்துகொண்டே ' என்னை நீங்க எங்க பார்த்திருக்க போறீங்க ' என்றேன் .
அழகிரி ' இல்ல சார் . உங்க முகம் எனக்கு ரொம்ப தெரிஞ்ச முகம் மாதிரியே இருக்கு '
சந்தோசமாக எனக்கு கை கொடுத்து விட்டு விடை பெற்றவர் கடையிலிருந்து காரில் ஏறுவதற்காக நடக்கும் போதும் அவருடைய நண்பர்களிடம் ' இவரை பார்த்தா.. எனக்கு இவர் முகம் ரொம்ப Familiar ஆ தெரியுது ' என்று மீண்டும் சொன்னார் .
காரில் ஏறியதும் சந்தோசமாக கை காட்டி விடை பெற்றார் .
அடுத்து சில நாளில் மதுரை போன போது தற்செயல் ஆ நான் கண்ட காட்சி . அவருக்கு இதில் ஒன்றும் இழுக்கு இல்லை . மதுரையில் சாதாரணமாக யாருக்கும் நடக்க கூடியது தான் . இன்று இவர் அஞ்சா நெஞ்சனாக எட்டு கண்ணும் விட்டெரிய வாழ்கிறார் எனும்போது இதை யாரும் நம்ப மாட்டார்கள் .
மதுரை பஸ் ஸ்டாண்ட் விட்டு நான் வெளியே வரும் போது அழகிரி அங்கு அவசரமாக ஆட்டோ திருநகருக்கு விசாரித்து கொண்டிருந்தார் . ஆட்டோகாரன் அடாவடியாக வாடகை கேட்பதை கண்டு விலகி நடக்க ஆரம்பித்தார் . ஆனால் மதுரை ஆட்டோ காரன் கோபமாகி 'டே கண்ணாடி என்ன நீ பாட்டுக்கு பதில் சொல்லாம போரே .. பதில் கூட சொல்லாம ' என்று சத்தமாய் கேட்டான் . இவர் சட்டை செய்யவில்லை . நானும் அவரிடம் பேச நினைத்து நெருங்கினேன் .சூழல் சரியில்லை . அவரும் என்னையும் கவனித்து விட்டு தான் வேகமாக நடந்து அந்த இடத்தை விட்டு அகன்றார் . அந்த ஆட்டோ காரன் திமுக காரனாக கூட இருந்திருப்பான் . இவர் யார் என்று தெரிந்திருந்தால் காலில் விழுந்திருப்பான் . சும்மாவே திருநகர் கொண்டுபோய் விட்டிருப்பான் . அவனுக்கு தெரியவில்லை .
மதுரையில் சவாரி படியவில்லை என்றால் இன்று கூட யாரையும் அவமான படுத்த ஆட்டோ காரர்கள் தயங்குவதில்லை . டிராப் செய்யும்போது கூட தகராறு செய்கிறார்கள் .
கருணாநிதியின் வாரிசுகளில் அழகிரி தான் வெள்ளந்தியானவர் என்று சாரு நிவேதிதா சமீபத்தில் ஒரு கேள்வி பதிலில் குறிப்பிட்டிருந்தார் .


கால முரணை விளக்கும் அழகான பதிவு. இன்று நீங்கள் எங்கே? இன்று அஞ்சா நெஞ்சன் எங்கே?
அன்புடன்
சூர்யா.