G .நாகராஜன் மதுரை திண்டுக்கல் ரோட்டில் மேலமாசி வீதியை ஒட்டி குடியிருந்த பலவீடுகள் கொண்ட ஒட்டுகுடித்தன வீட்டுக்கு நானும் என் நண்பர் M .சரவணனும் போயிருந்தோம் .அப்போது G .நாகராஜன் மறைந்து ஒரு மூன்று வருடம் இருக்கும் . கொஞ்சம் தெரியாத மாதிரி ' இங்கே G.நாகராஜன்னு ஒரு புரபஸர் இருக்கிறாரல்லவா . அங்கிருந்த பெண்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். ஒரு வயதான பிராமண பாட்டி உடனே சொளவை கீழே வைத்து விட்டு உடனே எங்களை கூர்ந்து பார்த்தார் .எழுந்து வந்தார் .
'யார் நீங்க ?'
'அவரோட மாணவர்கள் '.(' சும்மா..Harmless lie )
'பாடமெல்லாம் நன்னா நடத்துவான் . இறந்துட்டானே .தெரியாதோ ?'
'அப்படியா பாட்டி '
'வருஷம் ஆறது . '
'ம்ம் .. பாப்பார கள்ளன் ! துஷ்டன் ! '
எனக்கு ' மனுஷன் மகத்தான சல்லிபயல் ' என்று G.நாக ராஜன் சொன்னது ஞாபகம் வந்தது .
பாட்டி ' இனி பேசி என்ன ... '
அப்புறம் மீனாக்ஷி நிலையம் செல்லப்பன் ' இந்த கடைக்குள்ள கால் வைக்க கூடாது இனிமே ' என்று கடுமையாக G.நாக ராஜனை எச்சரித்ததை பற்றி எங்களிடம் சொன்னார் .
தெற்கு மாசி வீதி 'விழிகள் ' அலுவலகம் சென்றோம் . அங்கே இப்போது சினிமாவில் நடிக்கும் நாடக ராமசாமி இல்லை . அவர் தான் 'விழிகள் ' ஆசிரியர் .
கூத்து ராமசாமி அவரை பற்றி சொன்னார் . எல்லாம் இப்ப சுந்தர ராமசாமி 'நினைவோடை'யில் எழுதியுள்ள மாதிரி சமாச்சாரங்கள் . ' நெல்லை S.வேலாயுதம் அவர்களை சந்திக்க சொன்னார் .எழத்தாளர் டைலர் கர்ணனை பார்க்க சொன்னார் . கர்ணனை தேடினோம் .பார்க்க முடியவில்லை . ஆனால் வேலாயுதம் சோம சுந்தரம் காலனியில் இருந்தார் . அப்போது படிக்க கிடைக்காத "நாளை மற்றுமொரு நாளே " நாவல் அவர் தான் படிக்க கொடுத்தார் . நண்பர்கள் , மனைவி , அப்போது ஒரிசாவில் இருந்த சகோதரன் எல்லோரும் அவரை மறுதலித்த துயர கதைகளை சொன்னார் .அவர் மகன் தன் மூலமாக புத்தகங்களை நாகராஜன் இவருக்கு தெரியாமலே புத்திசாலிதனமாக கடத்திய கதை சொன்னார் .
சரவணன் இறுக்கமானவர் .உணர்வுகளை , அதிர்ச்சியை வெளிக்காட்ட மாட்டார் .நான் தான் நிலையிழந்து புலம்பி தீர்த்தேன் .
மதுரை டவுன் ஹால் ரோடு .ஒரு பேராசிரியர் 'விழிகள் ' ராம சாமி இடம் பேசிகொண்டிருக்கிறார் . ஒரு அழுக்கான நலிந்த மனிதர் ' ராம சாமி ' என்று இவரை அருகில் வந்து விளிக்கிறார் . ராம சாமி அவரை உடனே கண்ட படி திட்ட ஆரம்பிக்கிறார் . உடனே அவர் அங்கிருந்து அகன்று நடக்க ஆரம்பிக்கிறார் . இந்த பேராசிரியர் சிவக்கண்ணன் 'அவர் யாருங்க . " வினவுகிறார் .
'G.நாக ராஜன் '
சிவக்கண்ணன் பதறி விடுகிறார் . 'என்ன சொல்றீங்க .... நாக ராஜனா ... அவரையா இப்படி திட்டினீர்கள் . அவரா இப்படி பிச்சைக்காரன் மாதிரி இருக்கிறார் '
இந்த நாடக ராம சாமி .இப்போது சினிமா ராம சாமி ( பல ராம சாமிகள் . இவரை விழிகள் ராமசாமி என்ற பெயரால் அறிந்தோம் . புதுவையில் எதிர்வு நிகழ்வில் நான் சந்தித்திருக்கிறேன் ).
இவர் தான் நாக ராஜனின் கடைசி காலத்தில் அவரை கவனித்து போஷித்தவர் . அவருடைய கடைசி கிரியைகளுக்கும் செலவு செய்தவர் .
கி.ரா சொன்ன ஒரு விஷயம் . ' G.நாகராஜன் குளிக்க மாட்டார் . ஆனால் அவர் மேல் துர்நாற்றம் வீசி நான் பார்த்ததில்லே .'
எல்லோரோரையும் சித்திரவதை செய்த நாகராஜன் ஒருவரிடம் வாலாட்டினதில்லை . ஜெய காந்தன் !அவரிடம் காசு கூட கேட்க மாட்டாராம் . Trouble Makerஎன்று பிரபலமானவர் எந்த தொந்தரவும் இவரிடம் செய்ததில்லை .
சந்தேக கேசில் பிடிபட்டு தப்பிக்க முயன்று அனுபவித்த வியாகுலத்தை ' ஓடிய கால்கள் ' என்ற சிறுகதையாக நாக ராஜன் எழுதினார் .
மறுதலிப்பு !Rejection!
மனித வாழ்வின் மகத்தான துயரம் .
ஒரு நாவல் , ஒரு குறுநாவல் ,ஒரு சிறுகதை தொகுப்பு இவை மூன்றுமே நல்ல உயர்ந்த இலக்கிய அந்தஸ்து பெற்றுவிட்டன எனும்போது நாகராஜனின் சாதனை மலைக்க வைக்கிறது . அவருடைய கட்டுரைகளும் தான் .
"தீவிரமான தேடலில் அந்நியமாகிப்போன வாழ்வுக்கு முன்னுதாரணமாக காலத்திற்கு முன்னே பிறந்து காலத்திற்கு முன்னே செத்து போவான் . சிரஞ்சீவி கலைஞன் ஜி . நாகராஜன் !"
- விக்கிரமாதித்தன்


Ivargalai padipadum thuyarathaye kodukkum endre naan yennugirren....adhan karanamagave ivargalai thoduvadilai...(thee.Ja, kee.ra, Asokamitharan,g.na, even jk)... yen manam vizchiyai nooki nagarumo yendra bayam vundu...RP