Share

Dec 21, 2012

எங்க எம்.ஜி.ஆரா இருந்தா



’மிஸ்ஸியம்மா’ படத்தில் முதலில் பானுமதி தான் நடித்திருக்கிறார். ஆனால் அவர் பின்னர் மாற்றப்பட்டு சாவித்திரி கதாநாயகியாக நடித்திருக்கிறார்.தமிழில் ஜெமினி கணேசன், எஸ்,வி.ரங்கா ராவ், தங்கவேலு, ஜமுனா ஆகியோரும் நடித்த இந்தப்படம் தெலுங்கில் எடுக்கப்பட்ட போது இரண்டு பெரிய ஹீரோக்கள் நடித்தார்கள். என்.டி.ராமாராவ் கதாநாயகன்.அக்கினேனி நாகேஸ்வர ராவ் தமிழில் காமெடியன் தங்கவேலு நடித்த பாத்திரத்தில் நடித்தார்! ’தேவதாஸ்’ நாயகன் அதன் பிறகு காமெடி ரோல் செய்திருக்கிறார்!

’குறவஞ்சி’ படத்தில் முதலில் எஸ்.எஸ்.ஆர் கதாநாயகனாக ஒப்பந்தமாகிய நேரத்தில் அவர் விஜயகுமாரியை திடீர் திருமணம் செய்திருக்கிறார்.அதனால்  தயாரிப்புத்தரப்புக்கு ஏற்பட்ட இடைஞ்சலால் சிவாஜி கணேசன் நடிக்க நேர்ந்திருக்கிறது. ‘மன்னா! பசிக்கிறது என்றால் அடிக்கிறார்கள்! வலிக்கிறது என்றால் கொன்றே விடுகிறார்கள்!’

’வேட்டைக்காரன்’ படத்தில் சரோஜாதேவி தான் நடிப்பதாக இருந்திருக்கிறது. ஆனால் அவருடைய அம்மா செய்த பந்தாவால் சாண்டோ சின்னப்பா தேவர் மனம்புண்பட்டுப் போனார். அதனால் எம்.ஜி.ஆருக்கு சாவித்திரி கதாநாயகியாகியிருக்கிறார்.

’பணமா பாசமா’ 1968ம் ஆண்டு வந்த படம். இயக்குனர் திலகம்  கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கம்.ஜெமினி கணேசன்,சரோஜாதேவி, நாகேஷ் நடித்த படம்.
பணமா பாசமா எஸ்.வரலட்சுமி, டி.கே பகவதி, விஜய நிர்மலா ஆகியோருக்கு புது வாழ்வு கொடுத்த படம்.
குறிப்பிட்ட முந்தைய கால கட்டத்தில் எஸ்.வரலட்சுமி, டி.கே.பகவதி அந்த நேரத்தில் மறக்கப்பட்ட கலைஞர்கள்.
எஸ்.வரலட்சுமி வீரபாண்டிய கட்டபொம்மனில் சிவாஜிக்கு ஜோடி.அப்புறம் கந்தன் கருணையில் இந்திராணியாக “வெள்ளிமலை மன்னவா வேதம் நீயல்லவா” என்று தன் குரலில் பாடி நடித்திருந்தார்.
டி.கே.பகவதி சம்பூர்ண ராமாயணத்தில் ராவணன். சிவகெங்கைச் சீமையில் பெரிய மருது.
விஜய நிர்மலா ’எங்க வீட்டுப் பெண்’ தமிழ் படம் மூலம் அறிமுகம்.அடுத்து கே.எஸ்.ஜியின் ‘சித்தி’படத்தில் எம்.ஆர்.ராதா மகளாக,முத்துராமனுக்கு ஜோடியாக (சந்திப்போமா தனிமையில் நம்மைப் பற்றி சிந்திப்போமா?பாடல்)
பணமா பாசமா படத்தில் எஸ்,வரலட்சுமி, பகவதி, விஜய நிர்மலா மூவரும் பின்னியெடுத்திருப்பார்கள்.
 அந்த பணத்திமிர் மாமியார் வரலட்சுமி பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.
’அலேக்’ நிர்மலா என்று பேர் பெற்று ‘எலந்த பயம் எலந்த பயம்’ பாட்டின் மூலம் கொடி கட்டினார் விஜய நிர்மலா.
அமெரிக்கையான கண்ணியமான அப்பாவாக எல்லோர் மனதிலும் பகவதி இடம் பிடித்தார்.
அதன் பிறகு தமிழ்ப்படங்களில் சிலவருடங்கள் பிசியாக நல்ல ரவுண்டு வந்தார்கள்.
பணமா பாசமா மாமியார் ரோலுக்கு எஸ்.வரலட்சுமி நடிப்பு முதலில் இயக்குனர் கே.எஸ்.ஜிக்கு கொஞ்சமும் திருப்தியே இல்லையாம். சாவித்திரியிடம் போய் “வரலட்சுமி சரியில்லை.நீ தான் அந்த ரோலை பிரமாதமாக செய்யமுடியும்” என்று கெஞ்சியிருக்கிறார். ஜெமினி கணேசனுக்கு மாமியாராக சாவித்திரி!
சாவித்திரி பதில்: வாத்யாரே! நான் தான் அந்த மாமியார் ரோல் செய்தே ஆக வேண்டும் என்று நீங்க நினைச்சா ஹீரோவ மாத்திடுங்க.
கே.எஸ்.ஜிக்கு ஹீரோவை மாற்ற விருப்பமே இல்லை. அந்த ரோலுக்கு ஜெமினி தான் சரியான சாய்ஸ்.
சாவித்திரி உடனே ’வரலட்சுமியை மாற்ற வேண்டாம். நான் அவளுக்கு கவுன்சலிங் செய்கிறேன்.இனி பிரமாதமா அவ நடிப்பா’ என்று எஸ்.வரலட்சுமியை நேரில் சந்தித்து கோச்சிங் கொடுத்திருக்கிறார்.

ராஜேஷ் கன்னா தூள் கிளப்பிய ‘சச்சா ஜூட்டா’ படத்தை வாங்கி ரீமேக் செய்ய ரொம்ப பிரயாசைப்பட்டவர் நடிகர் பாலாஜி. ஆனால் எம்.ஜி.ஆர் அந்தப்படத்தின் மீது கண் வைத்து விட்டார். பாலாஜி வாங்கியிருந்தால் சிவாஜி கணேசன் தான் நடித்திருப்பார்.எம்.ஜி.ஆர் தான் ’நினைத்ததை முடிப்பவன்’ ஆயிற்றே! படத்திற்கு ’நினைத்தை முடிப்பவன்’ என்றே தான் பெயரும் வைத்தார்.

சின்ன அண்ணாமலை சிவாஜி ரசிகர் மன்றங்களை வழி நடத்தியவர்.
’சொன்னால் நம்ப மாட்டீர்கள்’ என்று ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.
அதில் ஒரு சுவாரசிய நிகழ்வை எழுதியிருக்கிறார்.
இவர் காரில் வந்து கொண்டிருந்திருக்கிறார். ஒரு தியேட்டரில் ஷோ முடிந்து கூட்டம் வெளியே வந்திருக்கிறது. படம் ’வீரபாண்டிய கட்டபொம்மன்.’ இவர் காரிலிருந்து இறங்கி பார்த்திருக்கிறார். எல்லோரும் கவலை தோய்ந்த முகத்துடன் நடந்து வந்து கொண்டிருந்திருக்கிறார்கள். இவர் ரொம்ப சோகமாய் வந்து கொண்டிருந்த ஒருவரை நிறுத்தி ’படம் எப்படி இருக்கு?’ என்று கேட்டிருக்கிறார். அந்த ரசிகர் உடனே ரொம்ப வேதனையுடன் சொல்லியிருக்கிறார் “ என்னங்க படம் இது. சிவாஜி சரியில்லீங்க. இதுவே எங்க எம்.ஜி.ஆரா இருந்தா சண்டை போட்டு அவ்வளவு வெள்ளைக்காரனுங்களையும் அடிச்சி விரட்டியிருப்பாரு! பானர்மேன தூக்குல தொங்கவிட்டுருப்பாரு! இப்படி சிவாஜி மாதிரி தூக்குல தொங்கியிருக்கவே மாட்டாரு.”

நாம், மதுரை வீரன், பாசம் போன்ற படங்களில் எம்.ஜி.ஆர் இறப்பதாக காட்சி உண்டு. அதனால் இடை வேளையிலேயே ரசிகர்கள் பலர் தியேட்டரை விட்டு கிளம்பி விடுவார்கள். இடைவேளைக்கு பிறகு படம் பார்த்தாலும் க்ளைமாக்ஸ் பார்க்காமல் எழுந்து சென்று விடுவார்கள்!

2 comments:

Note: Only a member of this blog may post a comment.