Share

Oct 21, 2016

1.காகம் 2.மூன்று கவிதைகள்


ஒரு காக்கா ஜன்னல் திரையை மூக்காலேயே தூக்கி கா..கா.. என்று ’எனக்கு எங்கே சாப்பாடு’ என்று உரிமையோடு கேட்குமளவுக்கு அன்னியோன்னியம். அன்னியோன்னியம் என்று சொல்லமுடியுமா? அது சந்தேகமாகத் தான் பார்க்கிறது. 

காக்காயை யாரும் பிடிக்க முயற்சிப்பதில்லை. கிளி போல கூண்டில் போட்டு வளர்க்கப்போவதில்லை. அல்லது கோழி போல யாரும் அறுத்து சமைத்து சாப்பிடவும் தயாராயில்லை. ஆனாலும் அதற்கு என்னா ஒரு நெனப்பு. ஜன்னல் திரையைத் தூக்கி கா..கா என்று நிதமும் ஒரு மூன்று முறையாவது வாலண்டியராக காக்காவே கூப்பிடும்போது அதற்கு ஏதேனும் உணவு, பலகாரம் கொடுக்க ஒவ்வொரு முறையும் ஜன்னலை நெருங்கும் போதே உடனடியாக ரொம்ப கன உஷாராக கொஞ்சம் ஒதுங்கி, பறக்க ஆயத்தமாகி
“ சாப்பிடக்கொடுக்கிற சாக்கில் என்னை பிடிக்க நினைத்து விடாதே.. நான் ரொம்ப உஷாராக்கும். என்னை தொட்டு விடாதே.. நான் ரொம்ப மடி, ஆச்சாரம் ” என்பதாகத் தான் அதன் ‘Body language’.
……………………………………………………………..



இரவில் மூங்கில் இளங்காற்று வீசும்போது ஆடி அதன் உச்சி நிலவை தொடுவதாக நிமிர்ந்து பார்க்கும் கண்ணுக்கு தோன்றுகிறது. டாப் ஆங்கிள் ஷாட்.
கவிஞன் பார்வையில் தோன்றும் படிமம்.
முலை என்கிற வார்த்தை இன்றும் கூட வெகு ஜன இதழ்களில் கெட்ட வார்த்தையாகத்தான் இருக்கிறது.

எஸ்.வைதீஸ்வரன் எழுதியுள்ள முலை கவிதைகள் மூன்று.
1.கனிவு
இரவின் ரகஸியத்தில்
வானம் காட்டிய ஒளிமுலை- ஒன்று.
அதை மெதுவாய்
இளமூங்கில் நுனிகள்
நெருடிப் பார்க்கும்
தென்றலில்..
இரவின் நிலவை மட்டுமல்லாது சூரியனையும் முலை படிமத்தில் அடக்கும் கவி.
2.துள்ளல்
மேலாக்கு வானம்
இழுத்து மூட இயலாத
இயற்கை முலைகளா, சூரிய சந்திரன்?
வேளைக்கொரு முலை மாற்றி
ஒளிப்பால் கொடுப்பதேன்,
பூமிக்கு?
தினம் குடித்து
வெளி உருண்டு ஆடும்
பிள்ளை மேதினிக்குள்
நானும் துள்ளுகிறேன்?
மூன்றாவது கவிதை ஒரு குழந்தையின் பொருமல். தவிப்பு.
3. குழந்தை
எனக்கும்
இந்த முலைக்கும்
எத்தனை நாள் சம்பந்தமோ?
தெரியவில்லை.
இந்தக் கையும் காலும்
என் கட்டற்று
கண்டபடி துள்ளுவதையும்
புரியாமல்
பொறுத்துக் கொள்கிறேன்.
ஆனால்
இந்தக் கட்டைவிரல் மட்டும்
என் கைக்கெட்டாமல்
வாயை ஏமாற்றும்
ஆத்திரந்தான்…..
……………………………………………………………………………

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.