Share

Jun 21, 2017

ஒரு சினிமா தயாரிப்பாளர்


தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் எவ்வளவு பெரியவர்களெல்லாம் இருந்திருக்கிறார்கள். நாகிரெட்டி, L.V.பிரசாத், A.V.மெய்யப்ப செட்டியார்,சாண்டோ சின்னப்பா தேவர், கே.பாலாஜி, பஞ்சு அருணாச்சலம்….


அக்கரைப் பச்சை என்று ஒரு படம். ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், லக்ஷ்மி, ஜெய சித்ரா, நாகேஷ் நடித்திருந்தார்கள்.
இந்தப் படத்தின் இயக்குனர் என்.வெங்கடேஷ். இவர் பின்னால் ஃபிலிமாலயாவில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஜி.கே.தர்மராஜ். இவர் சவடால் பேர்வழி. Uneducated crook என்ற வார்த்தையை வெங்கடேஷ் உபயோகித்து சீறியிருந்தார். தர்மராஜ் ஒரு பெரிய ஃப்ராடு என்பது அக்கரைப் பச்சை இயக்குனரின் ஸ்டேட்மென்ட். அக்ரிமெண்ட் போடும்போது கையெழுத்துப் போட தயக்கம் எல்லோருக்கும் இருந்ததாகவும் ஆனால் வெறும் ஆளான ஜி.கே. தர்மராஜ் துணிச்சலோடு கையெழுத்திட்டு தயாரிப்பாளர் ஆனது ஒரு விபத்து என்றும் பேட்டியில் இயக்குனர் கூறியிருந்தார். அந்தப் பேட்டியே ஒரு சின்ன உணவகத்தில் எடுக்கப்பட்டிருந்தது. படம் எடுக்கும்போதே பல தொந்திரவுகள் இவரால். ஃபைனான்ஸ் தொகை இன்ஸ்டால்மெண்ட்டில் கிடைத்த வேளைகளில் இவர் பணத்தை பெற்றதும் இவரை தேடும் நிலை கூட ஏற்பட்டதாகவும் வெங்கடேஷ் புலம்பியிருந்தார்.

ஆனால் பல வகையில் படம் ரிலீஸ் ஆன பின் தர்மராஜின் வாழ்க்கை தான் செழிப்பாக மாறியது.
The devil has better chance in this world!


ஜோதிடம் சொல்வதில் கொஞ்சம் சினிமாவில், அரசியல் உலகில் கூட பிரபலம் தர்மராஜுக்கு இருந்திருக்கிறது.
வடுகபட்டி ஜி.கே. தர்மராஜ். பெரிய குங்குமப் பொட்டு, மீசை.
ஒரு தயாரிப்பாளர் ஆக பரபரப்பாக சில வகையில் பிரபலமானார்.

சிவாஜி படம் ஒன்றை தயாரிக்கும் அளவுக்கு உயர்ந்தார்.
’இளைய தலைமுறை’யின் தயாரிப்பாளர் ஜி.கே.தர்மராஜ்.
’இளைய தலைமுறை படத்திற்கு தடை’ என்று தினத்தந்தியில் தலைப்புச் செய்தி.
தடை நீங்கி படம் ரிலீஸ் ஆனது
தர்மராஜ் இப்படியெல்லாம் சினிமாவை கலக்கினார்.


இதை விட பரபரப்பான செய்தியொன்று பின்னால் அகில இந்தியாவை திரும்பிப் பார்க்கும்படியாக செய்தது.
எம்.ஜி.ஆர் தன் வாழ்வில் எத்தனை தயாரிப்பாளர்களைப் பார்த்திருப்பார்.
முதலமைச்சர் ஆன பின் அவர் நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டார்.
ஆனால் எதனாலோ மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்தது!

சாதாரணமாகவே நடிகன் யாராயிருந்தாலும் கைக்கட்டு வாய்க்கட்டு கால்கட்டோடு பாடையில் போகும் போது தான் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் போகும்.

அதனால் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்ததை வினோதம் என்று சொல்ல இயலாது.
முதலமைச்சர் ஆன பின் அவர் நினைத்திருந்தால்
தான் கதாநாயகனாய் நடிக்கும் படத்தை தயாரிக்க பெரிய தயாரிப்பாளர் ஒருவரை அழைத்திருக்க முடியும்.

Dharmaraj fell into the honey pot! Excessive fortune!
What was the cap of his fortune?

தர்மராஜ் என்ன வசியம் செய்தாரோ, எப்படி எம்.ஜி.ஆரை கன்வின்ஸ் செய்தாரோ, யார் மூலமாக எம்.ஜி.ஆரை தொடர்பு கொண்டு சம்மதிக்க வைத்தாரோ?
தலைப்பு கூட தர்மராஜின் இலக்கு குறித்த குறிப்பாக இருந்ததே ஒரு அபத்தம்.
“ உன்னை விட மாட்டேன்”

கவிஞர் வாலி தான் டைட்டில் உபயம். அவர் தான் அவசரமாக அவசரமாக படத்துக்கு கதை உண்டு பண்ணியவர்.

சினிமாவுலகத்தை விடமாட்டேன் என்று அர்த்தமா? முதலமைச்சரானாலும் எம்.ஜி.ஆரை நடிக்க வைக்காமல் விடமாட்டேன் என்று அர்த்தமா?!

ஜி.கே. தர்மராஜ் தயாரிக்கும், இளையராஜா இசையமைக்கும், முதலமைச்சர்
 கதாநாயகனாய் நடிக்கும்
“ உன்னை விட மாட்டேன்.”
பாடல் பதிவுடன் பூஜை.
தினத்தந்தி தலைப்பு செய்தி மீண்டும்!

ஒரு முதலமைச்சர் சினிமாவில் நடிக்கலாமா? கடும் சர்ச்சை. அகில இந்தியாவே இந்த விசித்திர செய்தியை கவனித்தது.
எம்.ஜி.ஆர் படத்தில் நடிக்கிற ஆசையை ஓரம் கட்டி விட்டு முதலமைச்சர் வேலையை மட்டும் அப்போது தொடர்ந்தார்.

……………………………

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.