Share

Jan 15, 2018

ஹரி, ஹரி, Hurry,Hurry..அபயம், அபயம்


சென்னைக்கு நான் குடும்பத்துடன் 2015 செப்டம்பர் மாதம் வந்த போது நிர்க்கதியான நிலைமை. துயரம் சொல்லில் வடிக்க முடியாது.
வேலை கேட்டு எவ்வளவோ பேரிடம் மன்றாடினேன். அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, புதுவையிலிருந்த கி.ரா துவங்கி பலரிடமும் வேலை விஷயமாக கெஞ்சினேன்.

அப்போது பரிக்ஷா ஞாநி தினமலரில் பள்ளி மாணவர்களுக்கான பத்திரிக்கை திட்டம் ஒன்றிற்காக ஆலோசகராகவோ என்னவோ இருக்கிறார் என்பதால் ஸ்ரீகுமார் என்பவர் என் வேலை சம்பந்தமாக அவரிடம் சொல்லியிருப்பதாக சொன்னார். நான் அப்போது பத்திரிக்கை சம்பந்தமான வேலை என்பதால், கல்வித்துறை சம்பந்தப்பட்டது என்பதாலும் ஞாநிக்கு சில எஸ்.எம்.எஸ் அனுப்பினேன்.
நான் திருப்பூரில் மூன்று பள்ளிகளில் ஸ்போக்கன் இங்க்லீஷ் டீச்சராக பணியாற்றியவன் என்பதையும் 2015ம் ஆண்டு மாநிலத்தில் முதலாவதாக தேறிய ஜெ.பவித்ரா என் மாணவி என்பதையும் மெசேஜ் செய்தேன். அந்த வாரம் குங்குமத்தில் மனோரமாவுக்கு நான் எழுதிய இரங்கல் வெளியாகியிருந்தது. அதையும் ஒரு மெசேஜ் ஆக அனுப்பியிருந்தேன்.
ஞாநிக்கும் எனக்கும் ஏற்கனவே அறிமுகம் உண்டு. நான் அவர் ப்ளாக் படித்ததில்லை. ஆனால் அவர் என் ப்ளாக் பதிவுகளில் கமெண்ட் போட்டிருக்கிறார்.

2010ம் ஆண்டு திருப்பூர் புக் ஃபேரில் ஞாநி ஸ்டால் போட்டிருந்தார். அப்போது அவர் எனக்கு போன் செய்து என்னை சந்திக்க ஆசைப்படுவதாக சொன்னார். நான் அதனால் புக்ஃபேர் போய் சந்தித்தேன். அவருடைய ஸ்டாலில் புத்தகங்கள் வாங்கினேன்.
ஆம் ஆத்மி வேட்பாளராக ஆன போது ட்விட்டரில் ஞாநிக்கு என் ஆதரவை ட்விட்டியிருக்கிறேன்.
சென்னை வந்தவுடன் என் வேலை விஷயமாக பேசியிருக்கிறேன்.

அசோகமித்திரனிடம் நான் ஞாநி மூலமாக முயற்சி செய்வதை சொன்னேன். அவர் ஞாநியிடம் பேசுவதாக சொன்னார்.அசோகமித்திரனின் சீடன் என்று அறியப்பட்டவன் நான்.

யாராயிருந்தாலும் இப்படி எனக்காக பேசுவதாக சொல்வார்கள் தானே? இதில் என் மீதோ, எனக்காக சிபாரிசு பேசுபவர்கள் மீதோ என்ன தவறு இருக்கிறது?

வேலையில்லாமல் இருப்பது மரணத்திற்கு சமமானது.
நிர்வாணமாயிருப்பது போல.
A horse! a horse! My kingdom for a horse!
க்ருஷ்ணா நீ பேகனே பாரோ...
என்னுடைய இரண்டு மகன்களும் கூட வேலையில்லாமல் இருந்தார்கள்.

செப்டம்பர் 13ந்தேதி சென்னைக்கு வந்திருந்த நாங்கள் அக்டோபர் 2ந்தேதி இரண்டாவதாக ஒரு வீட்டிற்கு குடியேற நேர்ந்தது.
சுத்தமாக முறிந்து போயிருந்தேன். உடைந்து போயிருந்தேன்.
அசோகமித்திரனிடம் நான் பேசிய அடுத்த நிமிடம் ஞாநிக்கு அவர் போன் செய்து ராஜநாயஹத்துக்கு வேலை ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கிறார்.
அவர் பேசி முடித்த அடுத்த நிமிடம் ஸ்ரீகுமாருக்கு ஞாநி போன் போட்டு சீறியிருக்கிறார்.    “ ராஜநாயஹம் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார். எஸ்.எம்.எஸ் அனுப்பிக்கொண்டிருக்கிறார். அசோகமித்திரன் சிபாரிசுக்கு வருகிறார். எதற்காக அசோகமித்திரன் சிபாரிசுக்கு வரவேண்டும்.”
எனக்கே போன் செய்து இதை  தன்மையாக, நயமான முறையில்  சொல்லியிருக்கலாம்.
ஸ்ரீகுமார் என்னிடம் “ ஏன் இப்படி செய்கிறீர்கள்? அசோகமித்திரன் சிபாரிசுக்கு வருவதை ஞாநி விரும்பவில்லை. கோபப்படுகிறார். நீங்க அவருக்கு நிறைய எஸ்.எம்.எஸ் அனுப்புவதாக கோபப்படுகிறார்.”

ஏழ்மையை விட எதிர்கொள்ள நேரும் சிறுமை தான் பெரிய சித்திரவதை.
நான் நொறுங்கிப்போனேன்.
ந.முத்துசாமியை பார்க்க கூத்துப்பட்டறை போன போது அவரும் மாமியும் இளைய மகன் ரவியை பார்க்க சிங்கப்பூருக்கு போயிருந்தார்கள்.
மீண்டும் நவம்பர் 21ம் தேதி போனேன். ந.முத்துசாமி நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
எனக்கு உயிர்ப்பிச்சை கொடுத்தார்.

’எத்தனை சாமி வந்தாரோ, எத்தனை சாமி போனாரோ
அத்தனை சாமி ஒன்னா சேந்து முத்துசாமி ஆனாரோ.’

முத்துசாமியை புஞ்சையில் சுற்றமும் நண்பர்களும் ’கண்ணன்’ என்ற பெயரால் அழைப்பார்கள்.


…………………………………………………..

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.