Share

Oct 26, 2017

அங்க இருந்து.... இங்க வரை


”இந்தம்மா தான் நீ பிறக்கும்போது பிரசவம் பாத்தவங்க”
சொந்த ஊருக்கு போயிருந்த போது இப்படி ஒரு மலையாள அம்மாளை காட்டி சிறுவனாய் இருந்த என்னிடம் சொல்லியிருக்கிறாள் என் அம்மா. அந்த நர்ஸம்மா என்னை கன்னத்தை தடவி தாடையை பிடித்து கொஞ்சினாள்.
அந்த நர்ஸம்மாவை பற்றி இன்னொன்றும் கேள்விப்பட்டேன். என் பிறப்பிற்காக அம்மாவின் தலைப்பிரசவத்தை கவனிக்கும்போது அவரும் கர்ப்பமாயிருந்தார். ஒரு வாரத்தில் அந்த நர்ஸம்மாவிற்கு ஒரு பெண் குழந்தை பிறந்ததாம்.
அப்பாவின் உத்தியோகம் காரணமாக நாங்கள் சொந்த ஊரை விட திருச்சி, நாகப்பட்டினம், மதுரை போன்ற ஊர்களில் தான் அதிகமாக வாழ்ந்திருந்தோம். என் பெரியப்பா குடும்பமும் இதே மாதிரி தான். அப்பா,பெரியப்பா இருவருமே கஸ்டம்ஸ் அண்ட் சென்ட்ரல் எக்சைஸ்.
ஒரு கால கட்டத்தில் சிறு வயதில் எங்கள் தாத்தாவிடம் வேலை பார்த்த லட்சுமணத்தேவரிடமே என் பெரியப்பா தன் பங்கையெல்லாம் விற்று விட்டார். இனியெதற்கு சொந்த ஊர் என்பதில் அவர் உறுதியாய் இருந்தவர்.
என் அப்பாவின் பட்டிப்பத்து வயலை குத்தகை எடுத்த ஒருவன் அதை அடமானம் வைத்து விட்டு ஓடி விட்டான். பஸ் ஸ்டாப்பை ஒட்டியிருந்த வீட்டில் ஓட்டல் நடத்திக்கொண்டு குடும்பத்தோடு குடியிருந்த ஐயர் வாடகை வருடக்கணக்காக கொடுக்காமலே இருந்து கொண்டிருந்தார். கருங்குளம் வயல் விவசாயத்தை கவனித்துக்கொண்டிருந்த மாரியப்பன் செத்துப்போய் விட்டான்.
என் அப்பாவும் தன் பங்கையெல்லாம் விற்க முடிவெடுத்து விட்டார்.
நானும் அப்பாவும் பெரியப்பாவும் அது விஷயமாக சொந்த ஊருக்கு போனோம். லட்சுமண தேவரிடம் மிக ஈனக்கிரையத்திற்கு எங்கள் பங்கு வீடுகள், நிலங்களையெல்லாம் தாரை வார்த்தோம். லாட்டரி சீட்டில் அவருக்கு ஃபர்ஸ்ட் ப்ரைஸ் மாதிரி தான்.
ஐயர் ஓட்டலை ஒட்டி அந்த நர்ஸம்மாவின் மகள்  வீடு. அவள் எங்கள் பங்கு நிலத்தை கொஞ்சம் ஆக்கிரமித்திருந்தாள். நான் பிறந்த ஒரு வாரத்தில் பிறந்தவள். அவளும் நர்ஸம்மாவும் அப்போது தாதா போல ஊரில் பேர் வாங்கியிருந்தார்கள். நர்ஸம்மா மகள் புருஷன் ஒரு கேனப்பொச்சு. அப்புறம் என்ன? அவளுக்கு ஒரு சண்டியர் தொடுப்பு. அவன் எந்த நேரமும் வீட்டில் படுத்திருப்பான்.
சர்வேயர், வி.ஏ.ஒ, ஊர் பெரியவர்கள் எல்லோரும் இது ஆக்கிரமிப்பு தான் என்று உறுதியாக சொன்னார்கள். நல்ல முதியவர்கள் சிலர் அவள் வீட்டுக்கே வந்து நின்று நியாயத்தை கேட்டார்கள்.
என் அப்பாவுக்கு இளமையிலேயே மறைந்து விட்ட தோனி டாக்டர் உயிர் நண்பன். முசல்மான். இவருடைய உறவினர் ஒரு முதியவர் அங்கிருந்தார். பல தலைமுறை நட்பு.
சர்வேயர் அந்த வீட்டின் பின் பகுதியில் இருந்து கூப்பிட்டார்
“ அம்மா! அம்மா!”
அந்த அம்மாள் வந்தாள். என் பெரியப்பாவையும், அப்பாவையும் ஏறெடுத்து பார்த்து விடவே கூடாது என்பதில் சிறப்பு கவனம் செலுத்தினாள். கூடவே மகள் வந்தாள். நல்ல அழகாயிருந்தாள். பின்னால் தொடுப்பு விறைப்பாக வந்து நின்றான். கொஞ்சம் மறைந்தாற் போல் மகளுடைய கணவன் எட்டிப்பார்த்தான்.
என்ன நடக்கிறது என்பதை அந்த குடும்பம் தெளிவாக அறிந்திருந்தது. என் அப்பா, பெரியப்பா, நான் மூவரும் வந்ததிலிருந்து ஊர் பரபரப்பாக ஆகியிருந்ததை அறிந்தே இருந்திருக்கிறார்கள்.
நர்ஸம்மா முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

”உங்க இடம் எங்க இருந்து எது வரை இருக்குதும்மா”
நர்ஸம்மா கையை தூர ரயில்வே ஸ்டேசன் ஒட்டியிருந்த எங்கள் இடத்தைக் காட்டி உரத்த குரலில்“ அங்க இருந்து” என்று இழுத்து தன் இரு தொடைகளுக்கும் இடையில் அவள் சேலை மூடிய யோனிக்குள் தன் நடு விரலை விறைப்பாக விட்டு கிசுகிசுப்பாக “இங்க வரை” என்றாள். அப்போது அவள் விரலை நன்கு சுழற்றினாள்.
அந்த முஸல்மான் பெரியவரை பார்த்து மகள் கத்தினாள் “ நீரு என்ன மயித்துக்கு இங்க வந்தீரு. புண்டய பொத்திக்கிட்டு போயிரும்” அவரோடு ஏற்கனவே கடும் மனஸ்தாபத்தில் இருந்திருக்கிறாள்.
நர்ஸம்மாவின் மறைந்து விட்ட கணவரும், மகளுடைய தொடுப்பும் கூட தேவர் இனம்.
”டேய் லட்சுமணா, நீ செத்தா மறவன் தான்டா தூக்கிப்போட வரணும். ஜாதிய விட சொத்தாடா பெரிசு.” நர்ஸம்மா வார்னிங்.
திருச்சியில் சூப்பராக செட்டில் ஆகி விட்ட பெரியப்பா என்னிடம்  சொன்னார்
 “ டேய் துரை, இந்த ஊர்ல நம்மாள இருக்க முடியுமாடா?”





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.